தேள் திரைப்படம்
தமிழ் சினிமாவில் அம்மா பாசக் கதைகள் எவ்வளவோ வந்திருக்கிறது. இந்த 'தேள்', கொரியன் மொழியில் பத்து வருடங்களுக்கு முன்பு 2012ல் வந்த 'Pieta” என்ற படத்தின் அதிகாரப்பூர்வத் தழுவல் என படக்குழுவே அறிவித்துள்ளது.
கொரியாவிலிருந்து இறக்குமதி செய்ததாலோ என்னவோ அம்மா பாசத்திலும் கதையில் யூகிக்க முடியாத ஒரு வித்தியாசம் இருக்கிறது. “அன்பைக் கொடுத்து அதைத் திருப்பி எடுத்தால் அதன் வலி எப்படியிருக்கும்” என்பதை அம்மா பாசத்துடன் கொஞ்சம் அழுத்தமாய் சொல்லியிருக்கிறார்கள்.
நடன இயக்குனர், நடிகர் என வலம் வந்த ஹரிகுமார் முதல் முறையாக இயக்குனராகி இருக்கும் படம். அம்மா சென்டிமென்ட்டை உணர்வு பூர்வமாய் வைத்த விதத்தில் இயக்குனராய் பாஸ் ஆகிவிட்டார். மற்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நல்ல பர்சன்டேஜ் வாங்கியிருக்கலாம்.
சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் வட்டிக்குப் பணம் வாங்கி, சரியாகத் தராதவர்களிடம் அடித்து, உதைத்து அந்தப் பணத்தை வாங்கும் அடியாள் வேலை பார்ப்பவர் அனாதையான பிரபுதேவா. ஒரு நாளில் ஈஸ்வரி ராவ் திடீரென நான்தான் உனது அம்மா என பிரபுதேவா முன்பு வந்து நிற்கிறார். கோபத்தில் அவரை அடித்து விரட்டும் பிரபுதேவா, ஒரு கட்டத்தில் தாய்ப் பாசம் என்றால் என்ன என்பதை உணர்கிறார். அம்மாவுடன் பாசத்தைப் பகிர்ந்து வாழ்ந்து வரும் நிலையில், திடீரென ஒரு நாள் அவரது அம்மாவை யாரோ கடத்திவிடுகிறார்கள். அம்மாவை பிரபுதேவா காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கரடு, முரடான அடியாள் தோற்றத்தில் பிரபுதேவா அப்படியே பொருந்திப் போகிறார். அம்மா என்று வந்து நின்றவரைக் கூட கோபத்தில் அடித்து உதைக்கும் அளவிற்கு வெறி பிடித்த ஒரு மனிதர். எந்தப் பாசமும் அவரது கண்ணை மறைத்ததில்லை. அந்த அளவிற்கு பல குடும்பத்தவர்களை அடியோ, அடியென அடித்து பணத்தை வசூலிப்பவர். அவரது மனதில் அம்மா பாசம் வந்த பின் அவர் எப்படி மாறுகிறார் என்பது படத்தில் உணர்வுபூர்வமாக உள்ளது. எந்த அளவிற்கு ஆக்ரோஷமாக நடித்துள்ளாரோ, அதே அளவிற்கு பாசமாகவும் நடித்துள்ளார் பிரபுதேவா.
படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே. பெயருக்குத்தான் கதாநாயகி. இவரும் பிரபுதேவாவும் படத்தில் ஒரே ஒரு காட்சியில்தான் சந்தித்துக் கொள்கிறார்கள். ஆனால், அடிக்கடி சந்தித்துக் கொண்டவர்கள் என்பதை கடைசியில் ஒரு கட்டில் காட்சியில் காட்டி உணர்த்துகிறார்கள். இவருடன் எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பவராக யோகி பாபு. ஒரு இடத்திலும் சிரிக்க வைக்கவில்லை என்பது சோகம்.
அம்மா கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ். எப்படிப்பட்ட மனிதனையும் தாய்ப் பாசம் மாற்றிவிடும் என்பதற்கு இவரது கதாபாத்திரம் ஒரு உதாரணம். பிரபுதேவா மீது பாசமழை பொழிகிறார். அந்தப் பாசம் எதற்காக என்ற உண்மை தெரிய வரும் போது அதிர்ச்சியோ அதிர்ச்சி.
கோயம்பேடு மார்க்கெட்டிலேயே ஒரு முழு படத்தையும் எடுத்திருக்கிறார்கள். மார்க்கெட்டின் பல இடங்கள், பக்கத்துத் தெருக்கள், பிரபுதேவா வீடு என ஒரு செட் இப்படி குறுகிய வட்டத்திற்குள்ளேயே படம் முடிந்துவிடுகிறது. ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசுவுக்கு நிறைய வேலை, நன்றாகவே சமாளித்திருக்கிறார். சத்யாவின் பின்னணி இசை சென்டிமென்ட் காட்சிகளில் உருக்கியிருக்கிறார். சீரியசான கதையில் பிரபுதேவாவின் நடனத்திற்கு வேலையில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக