சில நேரங்களில் சில மனிதர்கள்
தாயை இழந்து தந்தையுடன் வாழும் சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் அசோக் செல்வன். திருமண தேதி முடிவு செய்யப்பட்டு அதன் பரபரப்பில் ஓடிக்கொண்டிருக்கிறார். சிறந்தவன் இருந்தாலும் கோவத்தில் அரக்கனாகவும், தான் சொல்வதைதான் கேட்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்.
ஒரு ரிசார்ட்டில் இருக்கும் அறைகளை சுத்தம் செய்யும் ரூம் மேனேஜ்மெண்ட் வேலை பார்த்து வரும் ஏழை இளைஞன் மணிகண்டன். கொடுக்கும் வேலையை பொறுப்பில்லாமல் செய்து விட்டு மற்றவர்கள் மீது குற்றம் சொல்பவர். தனக்கான அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கவில்லை என வருத்தத்தில் இருந்து வருகிறார்.
சினிமாவின் பிரபல இயக்குனராக திகழ்பவரின் மகன் அபிஹாசன். நண்பர்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய அவருடைய முதல் படத்தில் நடித்து அதன் வெளியீட்டுக்காக காத்திருப்பவர். தன்னுடைய சிந்தனை மட்டுமே சரியானது என்று நினைத்து, உலகம் வேறு போக்கில் தப்பாக இயங்குவதாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வருபவர் பிரவின். ஐடியில் பணிபுரிந்து ஆன்சைட்டில் வேலைக்கு செல்ல காத்திருக்கிறார். பணமும் புகழும் தான் உலகில் மதிப்பை அளிக்கும் என நம்புகிற இவர், யாரிடமும் உதவி கேட்டு தன் மதிப்பை இழந்திடக்கூடாது என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வருகிறார். இவர்கள் நான்கு பேரும் ஒரு மரணத்திற்கு காரணமாகி விடுகின்றனர். வெவ்வேறு திசையில் பயணிக்கும் இவர்கள் எப்படி ஒரு மரணத்தோட தொடர்பானார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் அசோக் செல்வன், அபிஹாசன், மணிகண்டன், பிரவின் என அனைவரின் நடிப்பும் எதார்த்தமாகவும் கதையின் நீரோட்டமாகவும் தென்படுகிறது. நாயகிகளாக நடித்திருக்கும் ரித்விகா, அஞ்சுகுரியன் மற்றும் ரியா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் தோன்றும் சிறு சிறு கதாப்பாத்திரங்களும் அந்த கதையிலேயே பயணித்து அவர்களின் நடிப்பையும் எதார்த்தமாக வெளிபடுத்தியிருக்கிறார்கள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழகான உணர்வுபூர்வ திருப்தியை தருகிற படமாக சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் அமைந்திருக்கிறது. மிக நேர்த்தியான திரைக்கதை, சினிமாவுக்கான எந்த பூச்சும் இல்லாமல் கதையை தவிர்த்து வேறு எங்கும் செல்லாமல் அழகாக அந்த வாழ்க்கைக்குள் நம்மை கொண்டு சேர்த்து விடுகிறார் இயக்குனர் விஷால் வெங்கட்.
படத்தின் காட்சிகளை படம்பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன், பார்வையாளர்களை அந்த இடத்திற்கே கடத்தி கொண்டு போகும் அளவிற்கு காட்சிபடுத்தியிருக்கிறார். படத்திற்கு கூடுதல் பலம் இசை. ரதனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக