முதல் நீ முடிவும் நீ திரைப்படம்

 


முதல் நீ முடிவும் நீ

தொண்ணூறுகளின் சென்னை. தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் நான்கு நண்பர்கள். அவர்களில், வினோத் (கிஷன் தாஸ்) இசையமைப்பாளராகி உலகம் சுற்றவேண்டும் என்ற லட்சியம் கொண்டவன். படித்து முடித்து வேலைக்குப் போய், அவனுக்கு காதல் மனைவியாக கைகொடுக்க வேண்டும் என்று உருகும்ரேகா (மீதா ரகுநாத்) அவனது காதலி.ஆனால், காதலை ‘மியூசிக் சேர்’ விளையாட்டுபோல எடுத்துக்கொள்ளும் சுட்டித்தனத்துடன் வளையவரும் சைனீஸ்(ஹரீஷ்.கே), வினோத், ரேகா இருவருக்கும் நண்பன். அவனது சேட்டைகளில் கூட்டணி அமைத்துக்கொள்கிறான் துரை (சரண் குமார்). இவர்கள் பயிலும் பள்ளிக்கு ‘நியூ அட்மிஷன்’ ஆக வந்துசேரும் கேத்தரீன், இந்த குழுவுக்குள் இணையாவிட்டாலும் வினோத் - ரேகாபிரிவதற்கு காரணமாகிறாள். மகிழ்ச்சி, கொண்டாட்டம், நிறைவு, பிரிவு, ஏமாற்றம்,வலி என பலதரப்பட்ட உணர்வுகளோடு பள்ளிக் காலத்தை முடித்து, கல்லூரியைக் கடந்து, வாழ்க்கைக்குள் நுழையும் இவர்களது நினைவுகளும், மீள் சந்திப்புகளும் எப்படி அமைந்தன என்பது மீதி கதை.

பள்ளி, கல்லூரியை கதைக் களமாககொண்ட திரைப்படங்கள் காலம்தோறும் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலான படங்கள் ரசிகர்களின் இதயத்தை தொட முயன்று தோற்றுவிடுகின்றன. இப்படம் வெகு இலகுவாக மனதுக்குள் நுழைந்துகொள்கிறது.

கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான புதுமுக நடிகர்கள் தேர்வு, புதுமுக நடிகர்கள் என்று நம்பமுடியாதபடி அவர்கள் தந்திருக்கும் வெகு இயல்பான நடிப்பு ஆகிய இரண்டு அம்சங்களும் கடைசிவரை நீடிக்கின்றன. உரையாடல், ஒழுங்கமைதி கொண்ட காட்சியாக்கம் என படத்தை எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ளார் தர்புகா சிவா.

கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், அவை வாழும் காலகட்டங்களின் நினைவுகளையும் காட்சி, இசை வழியாக நமக்கு கிளர்த்திவிடுவதில் போதிய அறிமுக வெற்றியை பெற்றுவிடுகிறார்.

சென்னை மாநகரின் நடுத்தர வர்க்கவாழ்க்கை, உயர்தட்டு பார்ட்டி கலாச்சாரம் என உண்மைக்கு நெருக்கமாக, அதேநேரம் சினிமாவுக்கு உரிய வண்ணங்களுடன் நம்பகமாக சித்தரித்தாலும், திருப்புமுனையை ஏற்படுத்தும் சம்பவம் உட்பட கதையோட்டத்தில் நிகழவேண்டிய திருப்பங்களின் எண்ணிக்கையில் போதாமை வெளிப்படுகிறது.

இசையமைப்பாளராக விரும்பும் நாயகனின் கால்களை காலம் எந்த திசையில்நடக்க வைக்கிறது என்பதை சிறு ‘ஃபேன்டஸி எலிமென்ட்’ உடன் புரட்டிப்போட்டு, இறுதியில் ‘மேஜிக்’ நிகழ்த்துகிறார் இயக்குநர். ஆனால், அந்த ‘உல்டா’வில் உலக எதார்த்தம் இருப்பதால்‘அட!’ என்கிற ஆச்சர்யத்துடன் எடுபட்டுவிடுகிறது. மனிதர்கள் எப்படியும் கனவுகாணலாம். ஆனால், காலம் எல்லாவற்றையும் கலைத்துப்போட்டு அல்லதுஒளித்துவைத்து கண்ணாமூச்சி ஆடுகிறது என்பதை, நினைவுகளின் மீட்டலாக சொன்ன வகையில் கவர்கிறது‘முதல் நீ முடிவும் நீ’.


கருத்துகள்