என்ன சொல்ல போகிறாய் திரைப்படம்

 

என்ன சொல்ல போகிறாய்

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் குமார் மற்றும் புகழ் நடித்துள்ள படம், இணையத்தில் ட்ரோலுக்கு ஆளாக அஸ்வினின் ஆடியோ விழா பேச்சு என வெளியீட்டுக்கு முன்பாகவே பேசுபொருளான ‘என்ன சொல்ல போகிறாய்’ படம் என்ன சொல்லியிருக்கிறது? இதோ முதல் பார்வை...

பிரபல தனியார் வானொலி நிலையம் ஒன்றில் ஆர்ஜேவாக இருப்பவர் விக்ரம் (அஸ்வின் குமார்). தன் இதயம் எதைச் சொல்கிறதோ அதன்படி செயல்படும் ஒரு இளைஞர். தனக்கு வரப்போகும் மனைவி (அ) காதலி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சில எதிர்பார்ப்புகளோடு வாழ்பவர். இவரது வீட்டில் இவருக்காகப் பல பெண்களைப் பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் யாரும் இவர் வகுத்து வைத்திருக்கும் வரையறைக்குள் வரவில்லை என்பதால் தொடர்ந்து அனைவரையும் நிராகரிக்கிறார்.

ஒருவழியாக எழுத்தாளராக இருக்கும் அஞ்சலியை (அவந்திகா மிஸ்ரா) பெண் பார்க்கச் செல்கிறார். அஞ்சலியோ தனக்கு வரப் போகும் கணவன் ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலித்தவராக இருக்கவேண்டும் என்ற நினைக்கிறார். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போகும் தருணத்தில், இதுவரை யாரையாவது காதலித்திருக்கிறீர்களா என்று அஞ்சலி விக்ரமிடம் கேட்கிறார். அந்த கணத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல் ஆமாம் என்று ஒரு சிறிய பொய்யைக் கூறிவிடுகிறார் விக்ரம். அவரது முன்னாள் காதலியைத் தான் பார்க்க வேண்டும் என்று அஞ்சலி கூறுகிறார். இதனால் தனது கற்பனைக் காதலியைத் தேடி அலையும் போது ப்ரீத்தியை (தேஜு அஸ்வினி) சந்திக்கிறார் விக்ரம். அவரைத் தனது வருங்கால மனைவியிடம் தனது முன்னாள் காதலியாக நடிக்குமாறு கோரிக்கை விடுக்கிறார். பெரும் தயக்கத்துக்குப் பிறகு ஒப்புக்கொள்ளும் ப்ரீத்தி மீது ஒரு கட்டத்தில் விக்ரமுக்கு காதல் வருகிறது. அதன் பிறகு என்னவானது என்பது சிறு குழந்தைக்கும் தெரிந்த கதை.

நாயகனாக அஸ்வின் குமாருக்கு முதல் படம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி முதல் படம் வெளியாகும் முன்னரே பெரும் ரசிகர் கூட்டத்தை சமூக வலைதளங்களில் பெற்ற ஒரே நடிகர் இவராகத்தான் இருப்பார். படத்தில் பெரிதாக குறை சொல்லமுடியாத நடிப்பை வழங்கியிருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் மட்டும் சிறிய தடுமாற்றம் தெரிகிறது.

நாயகிகள் அவந்திகா, தேஜு அஸ்வினி இருவருக்குமே கனமான பாத்திரம். அதைத் தங்களால் இயன்ற அளவுக்கு தாங்க முயற்சி செய்திருக்கிறார்கள். காமெடிக்கு புகழ். நகைச்சுவை எங்கும் எடுபடவில்லை. ரியாலிட்டி ஷோக்களில் அந்தந்த டைமிங்குக்கு அடிக்கும் ஜோக்குகள் சிரிப்பை வரவழைக்கலாம். அதே பாணியைத் திரையிலும் முயன்றால் எடுபடாமல் போகும் என்பதற்கு இப்படத்தின் காமெடி ட்ராக்குகள் ஓர் உதாரணம். தேஜு அஸ்வினியின் தாத்தாவாக வரும் டெல்லி கணேஷ் குறைந்த காட்சிகளே வந்தாலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

முதல் பாதி முழுவதும் கதாபாத்திர அறிமுகம், கதாபாத்திரங்களுக்கிடையிலான உணர்வுப் போராட்டம் என ஓரளவு சுவாரஸ்யமாகவே செல்கிறது. தனது வருங்கால மனைவியிடம் அஸ்வின் சொல்லும் பொய்யான ஃப்ளாஷ்பேக் காட்சியும், பின்னர் அதை உண்மையாக்க ஒரு பெண்ணைத் தேடி அலைந்து திரிவதும் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதல் பாதியில் தேஜு அஸ்வினி - அஸ்வின் இடையில் காதல் மலரும் காட்சிகள் அருமை. அதனை வெளிப்படையாக எடுத்த எடுப்பிலேயே போட்டுடைக்காமல் ஒரு மெல்லிய உணர்வு போல சிறிது சிறிதாக வெளிப்படுத்தியிருந்தது ரசிக்கும்படி இருந்தது.

படத்தின் இரண்டாம் பாதியில் முக்கோணக் காதலைக் காட்சிப்படுத்துகிறேன் பேர்வழி என்று பார்ப்பவர்களைப் படுத்தி எடுக்கிறார் இயக்குநர். முதலில் அஸ்வினுடைய கதாபாத்திரம் என்ன? ஆரம்பத்தில் தன்னுடைய இதயம் சொல்வதை மட்டுமே கேட்கும் நபர் என்று காட்டப்படுகிறார். ஆனால் இரண்டாம் பாதி முழுக்கவே அவரை ஒரு தடுமாற்றமான ஆளாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஹரிஹரன். முதலில் நாயகன் அஞ்சலியைப் பிடித்திருப்பதாக படத்தின் ஆரம்பத்தில் சொல்கிறார், அதன் பிறகு ப்ரீத்தி, பிறகு மீண்டும் இரண்டாம் பாதியில் அஞ்சலியால் ஈர்க்கப்படுகிறார். கடைசியில் கூட அஞ்சலியே திருமணத்தை நிறுத்தியதால் மட்டுமே ப்ரீத்தியைத் தேடிச் செல்கிறார். இப்படி அஸ்வினின் கதாபாத்திர வடிவமைப்பிலேயே ஏகப்பட்ட முரண்பாடுகள். அதேபோலப் படம் முழுக்க ப்ரீத்தி, விக்ரமின் முன்னாள் காதலி என்பதையே அஞ்சலி மறந்து விடுகிறார். அந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அஸ்வினைப் பற்றி ப்ரீத்தி மேடையில் ஏறிப் பேசுவதாகக் காட்டுவதெல்லாம் படு திராபையான காட்சி.

படத்தில் விவேக் - மெர்வினின் பின்னணி இசை பாராட்டத்தக்கது. பல காட்சிகளில் மெல்லிய மயிலிறகைப் போல மனதை வருடுகிறது. பாடல்களில் ‘க்யூட் பொண்ணு’ பாடலும் ‘நீதானடி’ பாடலும் சிறப்பு. மற்றவை சுமார் ரகம். அதே போல ரிச்சர்ட் எம்.நாதனின் ரிச்சான ஒளிப்பதிவும் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இதற்கு முன் 40 கதையைக் கேட்டுத் தூங்கியதாக அஸ்வின் பேசியிருந்தார். இந்தப் படத்தின் கதையையும் கொஞ்சம் தூங்காமல் கேட்டிருந்தால் இரண்டாம் பாதியில் நாம் தூங்கியிருக்க மாட்டோம்.

கருத்துகள்